நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. டெல்லியில் மட்டும் இதுவரை 19,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் காரணமாக 473 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கு பொது முடக்கம் தொடரும், அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "டெல்லியில் மாநில எல்லைகள் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது. அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மக்களிடம் ஆலோசனை கேட்ட பிறகு மாநில எல்லைகள் திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும். இதனை தவிர்த்து, சலூன்கள் திறக்கப்படும். ஆனால், அழகுப்படுத்தும் மையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆட், ஈவன் முறையில் கடைகளை திறக்க அனுமதித்தோம். ஆனால், இதுகுறித்து மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, அனைத்து கடைகளும் திறக்கப்படும்.
ஆட்டோக்கள், இ-ரிக்ஷாக்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தோம். ஆனால், அது தற்போது திரும்பப்பெறப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர மற்றவர்கள் யாரும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையிலான காலகட்டத்தில் வெளியேவரக்கூடாது என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. அதனை, டெல்லி அரசு பின்பற்றுகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'பிரதமர் நிதியிலிருந்து எவ்வளவு பணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?'