டெல்லியில் நடைபெற்றுவரும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க யூனியன் பிரதேச சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (டிச.17) நடந்தது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி யூனியன் பிரதேச அரசு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக விவசாயிகள் ஏன் தங்களது நலனைத் தியாகம் செய்ய வேண்டும். எதற்காக மத்திய அரசு, உழவர் விரோத கறுப்புச் சட்டங்களை அவர்கள் மீது திணிக்கிறது என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
இந்த வேளாண் சட்டங்களை நிராகரிப்பதுடன், இந்த கறுப்புச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் டெல்லி அரசு வேண்டுகோள் விடுக்கிறது.
கடந்த 21 நாள்களாக நடந்துவரும் இந்தப் போராட்டத்தில், இதுவரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். சராசரியாக, ஒரு விவசாயி இந்த தொடர்போராட்டத்தில், நாள்தோறும் தனது உயிரைத் தியாகம்செய்து வருகிறார். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு விவசாயியும் பகத்சிங்காக மாறிவிட்டனர்.
விவசாயிகளை அணுகுவதாகவும், வேளாண் திருத்தச் சட்டங்களில் உள்ள நன்மைகளை விளக்க முயற்சிப்பதாகவும் மத்திய அரசு கூறுகிறது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் விவசாயிகளிடம் தங்கள் நிலங்கள் பறிக்கப்படாது எனக்கூறுமா? நிலங்களைப் பறிப்பது தான் நன்மையா? தொற்றுநோய்ப் பரவலின்போது நாடாளுமன்றத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி, மாநிலங்களவையில் இந்த வேளாண் திருத்தச்சட்டங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்படவில்லை. ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த 3 சட்டங்களை டெல்லி அரசு கடுமையாக எதிர்க்கிறது. அதன் அடையாளமாக இந்த மூன்று சட்டங்களின் நகல்களை கிழிக்கிறேன். (டெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டங்களின் நகல்களை கிழித்தார்) மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்' என்றார்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சோம்நாத் பாரதி மற்றும் மகேந்திர கோயல் ஆகியோரும் மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களின் நகல்களைக் கிழித்து எறிந்தனர்.
இதையும் படிங்க : அடுத்த விக்கெட்டை இழந்த திரிணாமுல் காங்கிரஸ்