டார்ஜிலிங்: மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் உள்ள ராணுவத் தலைமையகத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடும் விதமாக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது, சிக்கிமில் எல்லை சாலை அமைப்பினரால், அமைக்கப்பட்ட காங்டோக்- நாதுலா மாற்றுவழிச் சாலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "தேசிய நெடுஞ்சாலை 310இன் பகுதிக்கான மாற்று வழியை சிக்கிம் மக்களுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காங்டோக்கை நாதுலாவுடன் இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை 310, கிழக்கு சிக்கிமின் எல்லைப்பகுதியில் உள்ள மக்களின் உயிர்நாடியாக விளங்கும்.
19.35 கி.மீ நீளமுள்ள மாற்று வழித்தடத்தை அமைப்பதன் மூலம், எல்லை சாலை அமைப்பினர், ராணுவம் மற்றும் கிழக்கு சிக்கிமில் வசிப்பவர்களின் எண்ணங்களை நிறைவேற்றியுள்ளனர்.
சிக்கிமின் எல்லை சாலைகள் பெரும்பாலானவை இரட்டை வழிப்பாதையாக மேம்படுத்தப்படுகின்றன. கிழக்கு சிக்கிமில் 65 கி.மீ சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இங்கு 55 கி.மீ., சாலை கட்டுமானப் பணிகள் திட்ட வடிவில் உள்ளது.
வடக்கு சிக்கிமில் உள்ள பாரத்மாலா திட்டத்தின் கீழ் 'மங்கன்-சுக்தாங்-எம்செம்டாங்' மற்றும் 'சுகந்தாங்-லாச்சென்-ஜிமா-முகுதாங்-நகுலா' வரை 225 கி.மீ., இரட்டை வழிச் சாலைக்கான கட்டுமானப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 9 கட்டங்களாக ஐந்தாயிரத்து 710 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளன" என்றார்.