மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால்,பிற மாநிலங்களில் வேலைசெய்துவந்த இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு நடைப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஜல்னா பகுதியிலிருந்து தங்களது சொந்த ஊரான புஷாவலுக்கு ரயில் தண்டவாளம் வழியாக நடத்து சென்றுள்ளனர். அப்போது, அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் மத்திய மகாராஷ்டிராவின் ஜல்னா பகுதியில் அமைந்துள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலையில் வேலைசெய்துவந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், "அவுரங்காபாத் ரயில் விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 16பேர் உயிரிழந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பாகச் சென்றடைவதை மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க: இந்திய பங்குச் சந்தை உயர்வு - ஜியோவில் தொடரும் வெளிநாட்டு முதலீடு காரணமா?