உத்தரப் பிரதேச மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்திலுள்ள உத்ரவுலா சௌக் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற உத்ராலா காவல் நிலைய அலுவலர் ஆர்.கே. ராமன் உயிரிழந்தவரின் உடலை நகராட்சி குப்பை வண்டியில் எடுத்துச் செல்லமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்தவரின் உடல் நகராட்சி குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்தக் கொடூரச் சம்பவத்தை அந்த வழியாகச் சென்ற சிலர் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். நகராட்சி ஊழியர்கள் சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றும்போது, அங்கேயே நான்கு காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஈடிவி பாரதிடம் பேசிய பால்ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் தேவ் ரஞ்சன் வர்மா, ”சமூக வலைதளத்தில் வைரலான பின்னரே, இச்சம்பவம் எங்களின் கவனத்துக்கு வந்தது. அதன்பின் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை உயிரிழந்தவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரின் உடல் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளோடு நல்லடக்கம் செய்யப்படும்” என்றார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேக்கு முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக விசாரணைக்குட்படுத்தி, நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரின் உடலும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை லாரி மூலம் காய்கறி வழங்கிய அவலம்