பிரபல பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கரோனா வைரஸ் நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற காரணத்தால் பாஜக எம்பி துஷ்யந்த் சிங், அவரின் தாயாரும் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜே ஆகியோருக்கு தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இதனிடையே, துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்திற்குச் சென்ற காரணத்தால் பல எம்பிகளுக்கு தொற்று பரவியிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இவர் அருகில் அமர்ந்த காரணத்தால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரையன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவரை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் அனுபிரியா பட்டேல் ஆகியோரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலர் துஷ்யந்த் சிங்கை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.