கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவர் வேறு சமுதாயத்தை சேர்ந்த நபரின் மோட்டார் பைக்கை தொட்டதற்காக மூர்க்கமாக தாக்கப்பட்டு, ஆடை கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலித் இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரிக்கையில், மினாஜகி கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்களை அந்த இளைஞர் கேலி செய்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தாக்கப்பட்டதாகவும் காவல்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தாக்கப்பட்ட இளைஞன் மீது இது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுபம் அகர்வால், இரு தரப்பு புகார்களை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளோம். தலித் இளைஞரை தாக்கியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இளைஞனின் தந்தை, தன்னுடைய மகன் மோட்டார் பைக்கை தொட்டதற்காக தாக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் எதிர்தரப்பு, இரண்டு பெண்களை கேலி செய்ததற்காக தாக்கியதாக கூறுகின்றனர். தலித் இளைஞரை தாக்கியது தொடர்பாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.