மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநிலங்களவை விவாத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், "சென்னையில் வாழும் பெரும்பாலான மக்கள் குடிநீருக்காக தண்ணீர் லாரி, தனியார் தண்ணீர் நிறுவனங்களை நம்பியே உள்ளனர். தனியார் நிறுவனம் வழங்கும் ஒரு லாரி தண்ணீர், ஒரு கிராம் தங்கத்தின் விலையைவிட அதிகமாக உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்கள். பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டது" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா, "எப்போதுமில்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனைத் தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் உள்ள நதிநீர்களை இணைக்க நேரம் வந்துவிட்டது" என்றார்.