நடப்பாண்டு (2020) கரோனா பரவல் காரணமாக மொத்த குற்ற செயல்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சைபர் குற்றம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு(2019) 1,400 ஆக இருந்த சைபர் குற்ற செயல்கள், நிகழாண்டு 2,456 ஆக பதிவாகியுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக, இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கூடுதல் ஆணையர் ஷிகா கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா சூழல் காரணமாக பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். பலர் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர்.
குற்றவாளிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவேதான் மொத்த குற்ற செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது" என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, 25 ஆயிரத்து 187 குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்தாண்டு 22, 641 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில், "குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் 35 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்தாண்டு போக்சோ சட்டத்தின் கீழ் 339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், இந்தாண்டு 221 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. பெண்களுக்கு எதிரான நிகழ்த்தப்படும் குற்ற செயல்கள் 19 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்துகளும் குறைந்துள்ளன" என்றார்.