டெல்லியில் குறைந்திருந்த கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த கரோனா இரண்டாவது அலை, முதலாம் அலையைவிட மோசமானதாக இருக்கலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,
"கடந்த சில நாள்களாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது என்னையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. வரும் காலங்களில் இன்னும் அதிக நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஏழு முதல் 10 நாள்களில் டெல்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம்.
10 நாள்களுக்கு பின், கரோனா வழக்குகளில் எண்ணிக்கை குறையும். டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததற்கும் கரோனா பரவலுக்கு ஒரு முக்கிய காரணம்" என்றார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,053 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,332ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து காற்று மாசு குறித்துப் பேசிய அவர்,
"இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ள ரசாயனம் 70 முதல் 95 விழுக்காடு விவசாய கழிவுகளை விரைவில் மக்க செய்துவிடுகிறது. அதை விவசாயிகள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த அறிக்கை தயார் செய்யப்படும். மேலும், அண்டை மாநிலங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதில் வலியுறுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: உலகின் முதல் தடுப்பூசி மருந்தாக செயல்பாட்டுக்கு வருகிறதா ’கோவிஷீல்ட்’?