நாடு முழுவதும் கரோனா ரைவஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் இதன் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கோவிட்-19 போர் அறை அமைக்கப்படவுள்ளது.
டெல்லி செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கோவிட் -19 போர் அறை' சுமார் 25 நிபுணர்களால் நிர்வகிக்கப்படும். இது அடுத்த சில நாள்களில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இது பெருமளவில் உதவியாக இருக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனை விரைவில் அமைக்கும்படி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் -19 போர் அறை அலுவலர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கைகளை சமாளிக்கக்கூடிய மருத்துவ உள்கட்டமைப்பின் தேவைகளை இது வலியுறுத்தும்.
மாவட்ட நிர்வாகத்தால் அந்தந்தப் பகுதிகளில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மாவட்டங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்புக்காக போர் அறை மையப்படுத்தப்பட்ட முறையில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உயர் அலுவலர்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் வகையில் ஐ.ஏ.எஸ் அலுவலர் ஒருவருக்கு இந்தப் போர் அறையின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவிட் -19 போர் அறையில் 20-25 வல்லுநர்கள் இருப்பார்கள், அவர்கள் சுழற்சி முறையில் வேலை செய்வார்கள்" என்று அலுவலர் கூறினார்.
சனிக்கிழமையன்று, டெல்லியில் புதிதாக இரண்டாயிரத்து 505 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில், 97 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3004 ஆக அதிகரித்துள்ளது.