ராய்பூர்: சட்டிஸ்க்ரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார். ஈடிவி பாரத் நவராத்திரியையொட்டி பதிவு செய்த சிறப்பு தொகுப்பில், தன்னலமற்று சேவை செய்யும் பல பெண்களிடம் பேசியது. அதில் ஒருவர்தான் மஞ்சீத் கவுர் பால்.
வேலையின்மையாலும் பசியாலும் தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை மஞ்சீத் மேற்கொண்டார். இதுகுறித்து மஞ்சீத், கர்ப்பிணி பெண் ஒருவரை காவலர்கள் நடைபாதையில் அமரச் செய்வதை ஒரு நாள் கண்டேன். இச்சம்பவம் எனக்கு கவலையளித்தது, வெளிமாநில தொழிலாளர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ளாதீர்கள் என காவலர்களிடம் கூறினேன். அரசாங்கத்தின் உதவியை பெற முடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போது தோன்றியது. என் போன்ற எண்ணம் உடையவர்கள் ஒரு குழுவாக இணைந்து மாவட்ட அரசு அலுவலர்களோடு சேர்ந்து பணியாற்ற தொடங்கினோம். இதன் விளைவாக ராய்பூரில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாபெரும் இல்லம் உருவானது. அவர்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றுவதற்கான அனைத்து உதவிகளும் கிடைத்தது என தெரிவித்தார்.
மேலும் அவர், தடிபாங் சவுக்கிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்தோம். வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்வதை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவர்களுக்கு முறையான பேருந்து வசதியும், உணவும் கிடைக்க வேண்டும் என தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்றார்.
ஜஸ்பூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த மஞ்சீத், குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர். 13 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.