கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடங்கி பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனிடையே, பேருந்து மற்றும் கார் ஓட்டுநர் சங்க உறுப்பினர்களை சந்தித்த நிதின் கட்கரி, பொது போக்குவரத்துச் சேவை விரைவில் தொடங்கும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதிகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுவருகிறது. பொது போக்குவரத்துச் சேவை விரைவில் தொடங்கும்.
மக்களிடையே நம்பிக்கையை உண்டாக்கி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை சேவை தொடங்குவதற்கு நீண்டகாலம் ஆகும். கிருமி நாசினி, முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
போக்குவரத்து துறை சந்திக்கும் நிதி நெருக்கடி குறித்து அறிவேன். அவர்களின் பிரச்னைகளை தீர்க்க ஆதரவாக இருப்போம். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கூடுதல் நேரம் பணி புரிந்துவரும் பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் தொடர்பில் உள்ளேன்.
முதலீட்டாளர்கள், தொழிற்சாலைகள் இந்த நெருக்கடி காலத்தை வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவை பெரிய சந்தையாக உருவாக்க வேண்டும். கரோனா வைரஸ், பொருளாதார மந்தநிலை ஆகியவைக்கு எதிரான போரில் நாடும் தொழிற்சாலைகளும் வெற்றி காணும். லண்டன் பொது போக்குவரத்து மாதிரியை பின்பற்ற அமைச்சகம் திட்டமிட்டுவருகிறது.
அரசின் முதலீட்டை குறைத்து தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பேருந்துகளை 5 முதல் 7 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், ஐரோப்பிய கண்டத்தில் 15 ஆண்டுகள் வரை பயன்படுத்துகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: மாநிலங்களின் நிதி நிலைமை எப்படி உள்ளது?