தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு வந்தார். அப்பெண்ணை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிக்சை அளித்துவந்தனர். இந்நிலையில் நேற்று அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் எல்டெலா ராஜேந்தர் கூறுகையில், “தெலங்கானாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி பெண், நேற்று ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். காந்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர்.
தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய்க்கு கரோனா இருப்பதால் அவர் பெற்ற குழந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அக்குழந்தைக்கு அடுத்த பிறந்த 24 மணி நேரத்தில் ரத்தம், சளி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்”என தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் காரணமாக தெலங்கானாவில் இதுவரை 1,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஹைதராபாத்தில் 624 பேர் பாதிக்கப்பட்டும், 21 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 'எல்லைப் பகுதிகளில் தேவையின்றி வருவோரை திருப்பி அனுப்ப வேண்டும்'