COVID-19: Myths VS Facts
நுண்ணியிர் எதிர்ப்பிகள் (Antibiotics ) கோவிட் 19 தொற்றை தடுக்கும் அல்லது குணப்படுத்தும்
இல்லை. பாக்டீரியா பாதிப்பை எதிர்க்க மட்டும்தான் நுண்ணியிர் எதிர்ப்பிகள் உதவும், கரோனா வைரஸ் தொற்றுக்கு அதை பயன்படுத்துவதில் பயனில்லை.
வானிலை வெப்பம் அதிகமாக இருந்தால் வைரஸ் பரவாது
இது உண்மை இல்லை. கரோனா வைரஸ் தொற்று வெப்பம், குளிர் மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும் சூழலிலும் பரவக்கூடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர கடைப்பிடிப்பதுதான் கரோனா தடுப்புக்கான வழி.
கை உலர்த்திகள் (Hand dryers) வைரசை அழிக்கும்
இல்லை. கோவிட் 19 வைரசை கை உலர்த்திகளால் அழிக்க முடியாது. கைகளை சோப்பு மற்றும் நீர் கொண்டு கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் தன்மையுடைய சானிடைசரை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பேப்பர் டவல் பயன்படுத்தி உலர்த்த வேண்டும்.
முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மட்டும்தான் இந்த வைரஸ் தொற்று ஏற்படும்
இல்லை. அனைத்து வயதினரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர். ஆனால், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் தொடர்பாக சிகிச்சை பெற்றும் முதியவர்கள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ஆல்கஹாலை உடலில் தெளித்துக் கொண்டால் வைரஸ் அழிந்துவிடும்
இல்லை. உடலில் ஆல்கஹாலை தெளித்துக்கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய செயலாகும். குறிப்பாக ஆல்கஹால் கண்களில் படுவது மிகவும் ஆபத்து. ஆல்கஹாலை தரையை சுத்தம் செய்ய கிருமிநாசினியாக பயன்படுத்தலாம், ஆல்கஹால் தன்மையுடைய சானிடைசரை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யலாம்.
கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பார்கள்
இது உண்மை இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கே கரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கும். மற்றவர்கள் கரோனா அறிகுறி தெரிந்தவுடன் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
கரோனா வைரசிலிருந்து பூண்டு பாதுகாப்பளிக்கும்
பூண்டு சாப்பிடுவதால் கரோனா தடுக்கப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாக்டீரியா வகைகள் சிலவற்றின் வளர்ச்சியை பூண்டு குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கரோனா என்பது வைரஸ் தொற்று.
கரோனாவிலிருந்து கோமியம் பாதுகாக்கும்
கோமியத்தில் சில மருத்துவ குணங்கள் உள்ளதென பாரம்பரியமாக கூறப்பட்டு வந்தாலும், அதனை அருந்துவதால் இதில் எந்த பயனுமில்லை.
தனிமைப்படுத்திக் கொள்ளுதல், கைகளை சுத்தமாக கழுவுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர பின்பற்றுங்கள். நோய் குறித்த அச்சம் தோன்றுவது நம்மை மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கும். நாம் தைரியமாக இருக்க வேண்டும். இயற்கை நம்மை துடைத்தெறிந்துவிடாது. இயற்கைக்கு மதிப்பளியுங்கள், அது நம்மை காக்கும்.