பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் கமல் கல்யாண். இவர் சமூக வலைதளத்தின் வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த சுமைலா என்ற பெண்ணுடன் நட்புறவு உருவாகியுள்ளது. நாளடைவில் நட்பானது காதலாக மாற, இரு வீட்டாரிடமும் தங்களது விருப்பத்தினை இருவரும் தெரிவித்துள்ளனர். இரண்டு தரப்பிலும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றோர் முன்னிலையில் காணொலி அழைப்பில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 2020 மார்ச் மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.
இச்சமயத்தில் கரோனா வைரஸ் பரவத்தெடங்கியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், சுமைலா இந்தியாவிற்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. விசாவுக்கான எல்லா பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த கடைசி நேரத்தில் தான் இந்திய - பாகிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டன. இருவரின் திருமண ஆசையிலும் இடியே விழுந்துள்ளது.
இதுகுறித்து சுமைலா தொலைபேசியில் பேசும்போது, "கல்யாண் விசா ஸ்பான்ஷர்ஷிப்பிற்கான ஆவணங்களைத் தயார் செய்துள்ளார். ஆனால், ஊரடங்கால் அவரால் ஆவணங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியவில்லை. இந்த விஷயத்தில் இந்தியப் பிரதமர் மோடி, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் விசா வழங்க வேண்டும். இரு நாடுகளும் கலந்து ஆலோசித்து விரைவில் எல்லைகளைத் திறக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கல்யாண் - சுமைலா இருவரும் நேருக்கு நேர் சந்திக்காமலேயே, ஒருவர் மேல் ஒருவர் அதீத பாசம் வைத்துள்ளனர். திருமணத்தை நடத்திவிட வேண்டும் என முடிவோடு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல் பலரிடையேயும் வெகுவான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.