புதிய கரோனா வைரசான கோவிட்-19 பெருந்தொற்று நோய் பாதிப்பிலிருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள, ஒருநாள் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு, 21 நாள்கள் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டு, தற்போது மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும்பொருட்டு மளிகைக் கடைகள், மருந்தகங்கள், காய்கறிக் கடைகள், பால் பொருள்கள் கடைகள் உள்ளிட்டவை இயங்குகின்றன. டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை.
மத்திய-மாநில அரசுகளின் 144 தடை உத்தரவு தொடர்வதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது கிடைக்காத ஏக்கத்தில் மதுவுக்கு அடிமையான குடிநோயாளிகள் ஷேவிங் லோஷன், வார்னிஷ் உள்ளிட்டவைகளை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மது கிடைக்காத ஏக்கத்தில் ஆறு பேர் (பெரும்பான்மை இளைஞர்கள்) தற்கொலை செய்துகொண்டனர். கேரளத்தில் இரண்டு மூத்தக் குடிமக்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்கொலை செய்தவர்களில் மூன்று பேர் வார்னிஷையும், மற்ற மூவர் முகச் சவரத்துக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ஷேவிங் லோஷனையும் குடித்து மரணத்தை தேடிக் கொண்டனர்.
2017-18ஆம் ஆண்டுகளின் தரவுகளின்படி டாஸ்மாக் வாயிலாக தமிழ்நாட்டுக்கு ரூ.31 ஆயிரத்து 757 கோடியும், உயர்தர வெளிநாட்டு மதுபானம் விற்பனை வாயிலாக ரூ.26 ஆயிரம் கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
இதுவே தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், டாஸ்மாக் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.455 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது. அதாவது தீபாவளியன்று (அக்டோபர் 27) டாஸ்மாக் மது விற்பனை ரூ.172 கோடியாகவும், 25, 26ஆம் தேதிகளில் முறையே ரூ.100 கோடி, ரூ.183 கோடியாக உள்ளது.
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய விஸ்கி சந்தையாக இந்தியா திகழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்தியர்களின் குடி மனநிலையை அறிந்துகொள்வது மிகவும் சிக்கலானது என்கிறார் இந்திய ஆல்கஹால், போதைப்பொருள் தகவல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜான்சன் ஜே இடயரன்முல்லா. அவரின் கூற்றுப்படி, இந்தியர்கள் அபாயகரமான குடிகாரர்கள், போதைக்காக அளவில்லாமல் குடிப்பவர்கள்.
ஆனால் நாட்டின் வருமானம் பெரும்பாலும் மது விற்பனை மூலமாகவே கிடைக்கிறது. குறிப்பாக பல மாநில அரசுகள் மது விற்பனை வாயிலாக கிடைக்கும் வருமானத்தை வைத்தே நிதி நிர்வாகம் நடத்துகின்றன.
இந்த நிலையில் ஒரு மாதம் காலமாக டாஸ்மாக் மூடியே கிடப்பது மாநில அரசுக்கு மிகப்பெரிய வருமான இழப்பு. அதுமட்டுமின்றி மது கிடைக்காத ஏக்கத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேபோன்று உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆகையால் தினந்தோறும் குடித்து குடித்து குடிக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் குறைந்தபட்ச மது, மருந்து போல் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
மேலும் குடிநோயாளிகள் பெருகாத வகையில் விழிப்புணர்வு, போதை மறுவாழ்வு சிகிச்சையும் அவசியம்.
இதையும் படிங்க: இதுவே சரியான நேரம்... மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வாருங்கள் தோழர்களே' - மனநல மருத்துவர் பெரியார் லெனின்