நாடு முழுவதும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், அதிகரித்துவரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் இரண்டாம் தேதிவரை வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர்த்து மற்ற அனைத்திற்கும் தடைவிதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கைக் கடுமையாகப் பின்பற்றும் விதமாக, அதிகளவிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அம்மாநிலக் காவல் துறை தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து எந்த வாகனமும் கர்நாடகாவில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவிற்கு எதிரான போரில் முக்கியமான கட்டத்தில் கர்நாடகா இருப்பதாவும், இந்தத் தருணத்தில் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், முன்னதாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இதுவரை 19 ஆயிரத்து 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், எட்டாயிரத்து 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 293 பேர் உயிரிழந்துள்ளனர்.