நாட்டில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் தன்னலமற்று அயராது உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், செய்தியாளர்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் 548 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் படி, பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ பணியாளர்களின் பட்டியளில் களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள், ஆய்வக உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், சமையல் ஊழியர்கள் ஆகியோர் யாரும் இடம்பெறவில்லை.
பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு இத்தொற்று எங்கிருந்து பரவியிருக்கும் என்பது குறித்து தகவல்கள் இல்லை. இதனால் அவர்களுக்கு பணியிடங்களிலிருந்து இத்தொற்று பரவியதா அல்லது மருத்துவர்கள் மூலம் பரவியதா என்பது தெரியவில்லை. கரோனாவால் நாட்டில் இதுவரை 49, 391 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,694 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில், தேசிய தலைநகர் பகுதியிலிருந்து இதுவரை 69 மருத்துவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர செவியலர்கள் உள்ளிட்ட 274 மருத்துவ பணியாளர்களும் இத்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 10 மருத்துவ பணியாளர்கள் இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை-மகனை இணைத்த ஊரடங்கு