இந்தியாவில் முதன்முறையாக கரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இத்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவரமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் இந்த வைரஸ் நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவிவருகிறது.
இந்நிலையில் நாட்டில் நேற்று முன்தினம் 3,722 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,003ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 134 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,549ஆக அதிகரித்துள்ளது.
1,849 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்ததன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,235ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றால் அதிக பாதிப்புகளான மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 1,495 பாதிப்புகளும், 54 உயிரிழப்புச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இதனால், அம்மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,992ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 975ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 5,547 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள குஜராத்தை, மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாடு நெருங்குகிறது. குஜாராத்தில் நேற்று 364 பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 509 பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டன. இதன்மூலம் குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,267ஆக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 9,227ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: இயல்பாகிப் போன புதிய சூழல்...