கோவிட்-19 (கரோனா) வைரஸ் தொற்று தற்போது சீனாவில் குறைந்து வந்தாலும் இத்தாலி, அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகளில் மிக வேகமாக பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கோவிட் 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சில நாள்களுக்கு முன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவேண்டும். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரியவில்லை" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கபில் சிபில் கூறுகையில், "இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் கடமை உள் துறை அமைச்சருக்கு உள்ளது" என்று கூறினார்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விரைவான நடவடிக்கைகளை எடுக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், அதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளாது. ஆனால், இதற்கு மாறாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் தன்னை மட்டும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியன் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு குறிப்பிட்ட பகுதியை முற்றிலும் முடக்கி தனிமைப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் ,அது குறித்து யார் முடிவெடுப்பார்கள். அதனால்தான் பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த குழுவில் இடம்பெற வேண்டும்" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வரை, இந்தியாவில் 110 பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவை எதிர்கொள்வது குறித்த சார்க் கலந்தாய்வு - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கோத்தபய!