புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடர்பான மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸின் பணிக்குழு தலைவருமான பிருத்விராஜ் சௌகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “12 முதல் 18 விழுக்காடாக இருக்கும் தனிநபர் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்கள்) மீதான சரக்கு, சேவை வரியை (ஜிஎஸ்டி) முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 5 விழுக்காடாக குறைக்க வேண்டும்.
தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கு தனிநபர் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் என்(N)-95 முகக் கவசங்களை வழங்குவதற்கான கொள்கையை குறிப்பிட்டுக் காட்டவேண்டும்.
மேலும் கோவிட் -19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தனியார் மருத்துவ நிபுணர்களைச் சேர்ப்பதற்கான ஒரு நிலையான இயக்க முறையையும் மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் கிராமப்புறவாசிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை, படுக்கைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டுகள் (ஐ.சி.யு) கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்த முழு ஊரடங்கு நேரத்தில் தாய்மார்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அரசு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “மாநிலத்தில் விவசாயத்துறைக்கு ஆறு மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாநில காங்கிரஸ் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. பயிர்க்கடன் மற்றும் பிற கடன் தள்ளுபடிகளையும் பரிந்துரைத்துள்ளது.
இதுமட்டுமின்றி உடல்நலம் மற்றும் உணவு கிடைப்பது தொடர்பான முதல் அறிக்கையை மாநில பிரிவு தலைவர் பாலாசாகேப் தோராத்திடம் காங்கிரஸ் குழு சமர்ப்பித்துள்ளது. பணிக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஊரடங்கு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் அமையும்” என்றார்.
இதையும் படிங்க: 'சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சிறப்பு ரயில் இயக்கும் திட்டம் இல்லை'