கோவிட் 19 தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலர் கோமியம்தான் கோவிட் 19 தொற்றுக்கு தீர்வு என வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த வகையில் பாஜக உறுப்பினர் ஒருவர், கோமிய விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவில் சிபு கோராய் எனும் துணி வியாபாரி கலந்துகொண்டு கோமியம் அருந்தியிருக்கிறார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தியும் குமட்டலுமாக இருந்துள்ளது. அதன்பிறகு அவர் ஜார்கிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக கோமிய விழாவுக்கு ஏற்பாடு செய்த பாஜக உறுப்பினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள சிபு இதுகுறித்து, “மாயாபூர் இஸ்கானுக்கு என் நண்பருடன் சென்றபோது, டிவியில் கோமிய விழா குறித்த விளம்பரத்தைப் பார்த்தேன். கோமியம் குடித்தால் கரோனா பாதிப்பு வராது என பாஜக தலைவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இதனால் 150 ரூபாய்க்கு 400 மில்லி கோமியம் வாங்கி அருந்தினேன். கோமியம் அருந்தியது முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது” எனத் தெரிவித்தார்.
இந்த பிரச்னை குறித்து ஜார்கிராம் மாவட்ட சுகாதார அலுவலர் பிரகாஷ் முடால், “சிபுவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நிலை தற்போது பரவாயில்லை. கோமியம் அருந்தினால் கரோனா பயம் வேண்டாம் என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அதனால் எந்த பயனும் இல்லை. மருத்துவர்கள் ஆலோசனைப்படி நடப்பதே சரியானது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் மதிப்பிலான கோழிகள் உயிருடன் மூட்டை மூட்டையாகப் புதைப்பு