இந்தியாவில் கோவிட் 19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி தேசிய தலைநகர் பகுதியில் பிரபல பீட்சா உணவகம் ஒன்றில் டெலிவரி பாயாக பணிபுரிந்த டெல்லி - மால்வியா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் பணிபுரியும் உணவகத்தின் உரிமையாளர் உட்பட 16 பேரும் தனிமைப்படுப்பட்டனர். அதேசமயம் அவர் பீட்சா டெலிவரி செய்த 72 குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டு தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அவருடன் பணியாற்றும் 16 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளதாக தெற்கு டெல்லி மாவட்ட நீதிபதி பி.எம்.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 72 குடும்பங்களுக்கு கரோனா அறிகுறி இல்லையென்பதால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் பி.எம். மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 543் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் குறிப்பாக டெல்லியில் மட்டும் 2003 பேர் பாதிக்கப்பட்டும் 45 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதையும் படிங்க: 'வெளவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்' - ஐ.சி.எம்.ஆர்