மத்திய அரசின் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, ஆகியவற்றுக்கு எதிராக கடந்தாண்டு டிசம்பர் மாதம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இரண்டு மாதங்களுக்கு மேலாக வடகிழக்கு, டெல்லி ஆகிய பகுதிகளில் அமைதிவழியில் நடைபெற்ற போராட்டத்தில் பிப்ரவரி மாதம் திடீரென பெரும் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் 54 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். இதனையடுத்து, இது தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இவ்வழக்கில் உபா சட்டத்தின் கீழ் உமர் காலித் கடந்த செப். 13ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர் மீது டெல்லி காவல் துறை அக். 1ஆம் தேதி மற்றொரு வழக்கை பதிந்து, காவல்துறை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
3 நாள் விசாரணை முடிந்ததையடுத்து, தற்போது அவர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உமர் காலித்திற்கு சிறையில் உரிய பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென கோரி அவரது வழக்குரைஞர்கள் சன்யா குமார், ரக்ஷந்தா தேகா ஆகியோர் திகார் நீதிமன்ற வளாகத்தின் பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த பாட்டியாலா பெருநகர மாஜிஸ்திரேட் தேவ் சரோஹா, "குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சிறை விதிகளின்படி உள்ள அனைத்து உரிமைகளையும் சிறை அலுவலர்கள் வழங்கிட வேண்டும்.
அதேபோல, உமர் காலித்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது, அவருக்குத் தேவையான பாதுகாப்புகளை சிறை கண்காணிப்பாளர் உறுதிசெய்திட வேண்டும்.
அவர் கேட்கும் புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பிற வசதிகளை வழங்குவதற்கும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதுவரை இந்த வழக்கில் மாணவர் தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா ஜார்கர் உள்ளிட்ட 1,575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.