உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவிலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த நான்கு ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் ரவுடிகள் கலசாரமும் ஊழலும் அதிகரித்துள்ளன.
விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கிவிடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையைச் சொன்னால், விவசாயிகளின் வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது.
நிதிச்சிக்கல் காரணமாக உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பத்தை எங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்தனர்" என்றார்.
மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதில் முதன்மையாகத் தங்கள் அரசு விளங்குவதாக யோகி ஆதித்யநாத் கூறிவருவதை விமர்சித்த அவர், "இந்த அரசு மக்களுக்கு மோசமான சுகாதார வசதிகளையும், கல்வியையும் தருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை ஆகியவை தற்போது அதிகரித்துள்ளன" என்று விமர்சித்தார்.
மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேலைவாய்ப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும் சீர்மிகு நகரம், மெட்ரோ போன்ற திட்டங்களுக்கான பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் காட்டமாக யோகி அரசை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் சட்ட ஒழுங்கு இவ்வளவு மோசமாக இருந்தால் யாரும் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்றும் மாநிலத் தலைநகரிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் வன்முறைச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று யோகி ஆதித்யநாத் கூறுவது குறித்து அவர் கூறுகையில், "வன்முறையாளர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வருவதாக உள் துறை அமைச்சர் கூறியது முதலமைச்சருக்குத் தெரியாமல் இருக்கும்போல. வன்முறையாளர்கள் எல்லாம் அரசில் அங்கம் வகித்தால் வன்முறையை நடத்த ஆள் இருக்காதுதான்" என்றார்.
இதையும் படிங்க: ராஜிநாமா செய்கிறாரா கமல் நாத், ம.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி?