புதுச்சேரியில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் அவரது செயலகத்தில் நடைபெற்றது. இதில் வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக பிரான்ஸ், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும், புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையங்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில், இன்று முதல் புதுச்சேரியில் உள்ள மால்கள், சினிமா தியேட்டர்கள், பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, அருங்காட்சியகம், பாரதி பூங்கா, நோனங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், கடற்கரை சாலை வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் கடைகளை மூட உத்தரவு :வெறிச்சோடி கிடக்கும் தி.நகர்