கரோனா தொற்றின் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு படிப்படியாக வழிகாட்டுதலின்படி தளர்த்தப்பட்டுவருகிறது. இருப்பினும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு மத்திய அரசு ரெட் சிக்னல்தான் காட்டிவருகிறது. இதனால், திரையரங்கில் பணியாற்றிவந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
அந்த வகையில், குஜராத்தில் மட்டும் சுமார் 250-க்கும் அதிகமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பணியாற்றிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து குஜராத் மல்டிபிளக்ஸ் தியேட்டர் அசோசியேஷன் உறுப்பினர் ராகேஷ் படேல் கூறுகையில், "கரோனா தொற்றின் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மார்ச் முதல் ஜூன் மாதம் வரை கணக்கிட்டதில் சுமார் 250 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளோம்.
சரியாக கோடை விடுமுறையை எதிர்பார்த்து பல திரைப்படங்கள் வெளியீட்டிற்காகத் தயாராக இருந்த நிலையில், ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அனைத்தும் தள்ளிச்சென்றன. பெரும் அளவிலான வருவாய் இழப்பை நாங்கள் சந்தித்துள்ளோம்" என்றார்
இதைத் தொடர்ந்து பேசிய சிட்டி வைட் ஆங்கிள் தியேட்டரின் பொது மேலாளர் நீரஜ் அஹுஜா, "மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மூடப்பட்ட போதிலும், பராமரிப்புச் செலவுகள், மின்சார கட்டணம் போன்ற வழக்கமான செலவுகளை உரிமையாளர்கள் செலுத்து வேண்டிய கட்டாயம் உள்ளது.
வழக்கமான வருவாய் இல்லாமல் இந்தச் செலவுகள் அனைத்தையும் பூர்த்திசெய்வது கடினமாக இருந்தது. நிறுவனத்தின் சாதனங்களைப் பராமரிக்க வேண்டும். அதேபோல், எங்கள் நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்வதும் எங்களின் கடமையாகும்.
ஆனால், அனைவரையும் பணியமர்த்தி ஊதியம் கொடுப்பதற்காக சூழ்நிலையும் இல்லை. சில ஊழியர்களைப் பணியமர்த்தி அவர்களுக்கான சம்பளத்தை வழங்கிவந்தோம். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறப்பதற்கு அரசு அனுமதிக்கும் என நாங்கள் கோருகிறோம்" எனத் தெரிவித்தார்.