சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று இப்போது இத்தாலி, அமெரிக்கா, கனடா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் மூலம் வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவிவிடாமல் தடுக்க, பல்வேறு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன.
இந்நிலையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த 85 வயது முதியவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தானின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "துபாயிலிருந்து பிப்ரவரி 29ஆம் தேதி இந்தியா வந்த 85 வயது மதிக்கத்தக்க நபர், வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் அவர் இந்தியா வந்துள்ளார். அவருடன் தொடர்புகொண்ட 235 பேர் குறித்து விவரங்களை சேகரித்துவருகிறோம், அவரது மனைவிக்கும் மகனுக்கும் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு?