புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், காரைக்கால் அடுத்த கீழகாசகுடி பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவின் பேரில் 300 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஊழியர்களுக்கு போதிய வசதி இல்லை எனக் கூறி மருத்துவமனையின் உள்ளே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேவையான வசதிகள் செய்து தரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் தெரிவித்தனர்.