புதுச்சேரி சுப்பையா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரை ஜூன் 7ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது கில்லால், சதீஷ் உள்பட 4 பேர் முன்விரோதம் காரணமாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த கோரிமேடு காவல் துறையினர், 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்ட கைது, அவருடன் இருந்தவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரையும் கைது செய்த காவலர்கள், காவல் நிலையத்தில் இருந்த காவல் துறை அலுவலர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.