புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறைச் செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரசாந்த் குமார் பாண்டா காணொலியில்; 'புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இனிமேல் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதுச்சேரி நெட்டப்பாக்கம் எம்.ஆர்.எப். தொழிற்சாலையில் பணியாற்றுபவருக்கு இந்த நோய்த்தொற்று வந்துள்ளது. அவருக்கு நோய்த்தொற்று எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. ஆய்வு செய்து வருகிறோம்' எனக் கூறினார்.
இதையடுத்து மோகன்குமார், 'நாம் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை கட்டாயமாக்க வேண்டும். தற்போது புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்தார். அப்போதுதான் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதுதொடர்ந்து அவரது குடும்பத்தினரையும், உடன் பணியாற்றுபவர்களையும், பயணித்தவர்களையும் கண்காணித்து வருகிறோம்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: திருமணத்தில் புதுமை... மாஸ்க்கில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்!