பீகாரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தனியார் மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம், கிளினிக்குகள், மருந்தகங்கள் ஆகியவற்றில் கரோனா நோயறிதல் மையங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் நேற்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில், "தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரது தகவல்களை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவமனையில் தனி மனித விலகலை கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், ஊழியர்களுக்கு முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
கரோனா உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தகவல்களை மூன்று மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது. இதுவரை பீகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113-ஆக அதிகரித்துள்ளது. இதில், 42 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதியுதவி அளித்தவர்களின் விவரம் வெளியிட்ட அரசு!