ஆந்திரா மாநில நெல்லூர் மாவட்டத்தில் அரசு கல்லூரியில், காவலர் ஒருவர் முன்னிலையில் ஆறு வயது சிறுமி தரையை சுத்தப்படுத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் டி.ஜி.பி. கௌதம் சவாங், இச்சம்பவம் குறித்து விசாரித்து அந்த காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அட்மாகுரு பகுதியில் அமைந்துள்ள ஜுனியர் கல்லூரியில், காவலர் ஒருவர் தனது மகளை தரையைச் சுத்தப்படுத்த கூறியுள்ளார். இந்த வீடியோ உள்ளூர் செய்தித் தொலைக்காட்சிகளில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநில டி.ஜி.பி இச்சம்பவம் குறித்து விசாரிக்க நெல்லூர் எஸ்.பி-யை வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்தக் காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல் துறையினருக்கு குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்தவேண்டியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்க முடியாது. கூடுதல் பயிற்சி மற்றும் புரிதலை காவலர்கள் மத்தியில் உருவாக்க வேண்டியதுள்ளது. கூடியவிரைவில், இது குறித்து காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள்!