ஜம்மு - காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து மூத்த காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், "பிற்பகல் 2 மணிக்கு புல்வாமா மாவட்ட செக் போஸ்ட் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார். பாதுகாப்பு வீரர்களும் இதற்கு பதிலடி கொடுத்தனர். இருப்பினும் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர்” என்றார்.
புல்வாமாவில் வசித்துவந்த தலைமைக் காவலர் அனூப் சிங் மற்றும் 10ஆவது பட்டாலியனைச் சேர்ந்த கிஷ்த்வாரில் வசித்துவந்த காவலர் முகமது இப்ராஹிம் ஆகிய இருவரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரிவினைவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் மோதல்