கேரளாவில் கோவிட்-19 நோய் அறிகுறிகளுடன் உள்ள நபர்களை கண்டறிய ஏதுவாக செயலி ஒன்றை பயன்படுத்த அமெரிக்க நிறுவனத்துடன் அம்மாநில அரசு ஒப்பந்தமிட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, "எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சட்ட வழிமுறைகளின்படி நீதி, வருவாய், சுகாதாரம், வர்த்தக துறையினர்களிடம் இதுகுறித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
அதுபோக, முதலில் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதில் எதுவும் நடக்கவில்லை. வருங்காலத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து ஏதேனும் பிரச்னை வருமாயின் அதில் நியூயார்க் அரசு தலையிட வேண்டிய சூழல் ஏற்படும்.
முதலமைச்சரின் (பினராயி விஜயன்) பதில் தெளிவாக இல்லை, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. எனவே, இதுகுறித்து அவர் தெளிவான பதில் அளிக்க வேண்டும்.
1991ஆம் ஆண்டு அவர் நிதியமைச்சராக இருந்தபோது அமெரிக்காவுடன் தொடர்புடையை அனைத்தையும் குறை கூறிவந்தார். சர்வதேச நிதியம், ஏடிபி கடன் வழங்க முன்வந்தபோதும் அதனை அவர்கள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) கடுமையாக எதிர்த்தனர். பின்னாளில்தான் அந்த நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டனர்.
இன்று எந்த ஒரு அடிப்படை வழிமுறைகளையும் பின்பற்றாமல் அமெரிக்க நிறுவனத்துக்குத் தரவு சேமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுக்கொள்ளும்படியான பதிலுடன் விஜயன் வெளிவர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : 'செய்தியாளர் சந்திப்பு இனி தினமும் கிடையாது?' - ஸ்ட்ரிக்ட் ஆன பினராயி விஜயன்