கொரோனா வைரஸ் காரணமாக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விலை குறையாமல், இதன் மீதான கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பாக டெல்லியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மத்திய முன்னாள் அமைச்சர் அஜய் மக்கான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலையை 35 முதல் 40 விழுக்காடு வரை குறைக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை குறைப்பின் மூலம் வரும் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும். பொது நலனை உறுதி செய்ய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அழுத்தம் தரப்படும். கலால் வரி உயர்த்தியதன் மூலம் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு 22.98 ரூபாயாக உயர்ந்துள்ளது, டீசல் 18.83 ரூபாயாக உயர்ந்துள்ளது.
2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்றபோது, லிட்டருக்கு 9.48 ரூபாய் வரி விதிக்கப்பட்டது. டீசல் மீது விதிக்கப்பட்ட வரி 3.56 ரூபாயாக இருந்தது. 12 முறை மத்திய கலால் வரி உயர்த்தப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி! பெட்ரோல் - டீசல் விலை குறையாமலிருக்க வரி உயர்த்திவரும் அரசு!