டெல்லி: காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமையன்று (ஆக.29) பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், பிரபல ஆங்கில தினசரி நாளேடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பாஜகவுக்கும் வாட்ஸ்அப்பிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து "பக்கச்சார்பற்ற" விசாரணைக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.? பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுகளை பேஸ்புக் தடுக்க தவறிவிட்டதாகவும் அந்நிறுவனம் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பேஸ்புக் நிறுவனரும் அதன் தலைமை செயல் அலுவலருமான மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், “பேஸ்புக்கில் பகிரப்படும் கருத்துகளால் சமூக ஒற்றுமைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
லாபத்தை ஈட்டும் நோக்கத்தில் உள்ள ஒரு நிறுவனம் சமூக ஒற்றுமையில் கவனத்தை செலுத்தாது.
நாங்கள் ஏற்கனவே கடந்த 17ஆம் தேதி இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளோம். பேஸ்புக் நிறுவனத்தின் வெறுப்புணர்வு பேச்சுகளை மீறும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன.
இந்த வெறுப்புணர்வு பேச்சுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பாஜகவுக்கும் பேஸ்புக்குக்கும் என்ன தொடர்பு? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, "சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இந்தியா நடவடிக்கைகளுக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்கும் இடையிலான நெருக்கம் இப்போது வேகமாக அதிகரித்துவருகிறது. இனி இது ஒரு இந்திய பிரச்னை அல்ல, உலகளாவிய பிரச்னை" என்றார்.
மேலும், ஊடகத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டிய கெரா, "ஆளும் அரசுடன் மிக நெருக்கமாக உள்ள துக்ரால் என்பவர் வாட்ஸ்அப் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வு தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி கூறுகையில், "எந்தக் கட்சியை விரும்புவது என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு. இதில் தனிப்பட்ட நிறுவனங்கள் தலையிட அனுமதிக்க முடியாது” என்றார்.
இது மட்டுமின்றி வாட்ஸ்அப் தனது சொந்த ஆன்லைன் கட்டண தளத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதால், “இந்தப் பரிவர்த்தனை தகவல்கள் பாஜகவுடன் பகிரப்படலாம்” என்றும் காங்கிரஸ் அச்சம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகையில், "இது ஒரு அரசியல் பிரச்னையும் அல்ல, இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் அல்ல. இவைகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவை” என்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் "முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற" விசாரணையை நாடிய காங்கிரஸ், கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரியது. விசாரணை முடியும் வரை வாட்ஸ்அப் அதன் கட்டண நடவடிக்கைகளுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்கள், காங்கிரஸ் கட்சியைத் தாக்கிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறித்து கேள்வியெழுப்பினார்கள்.
அதற்கு பதலளித்த கெரா, “நாங்கள் பேஸ்புக்கை குறிவைக்கும் போதெல்லாம், ரவிசங்கர் பிரசாத் உடனடியாக அதனை மறுக்கிறார். பேஸ்புக்கோடு அவர் என்ன உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: பாஜகவின் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு