இந்திய, சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் தொடர்ந்து ஊடுருவிய போதிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன் சீனா சென்றது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், "தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவுரியா தோவல் சீனாவுக்கு சென்றது ஏன்? அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என்ன? இச்சந்திப்பு மூலம் நமக்கு என்ன கிடைத்தது? இச்சந்திப்பு கூட்டங்களில் அவர் தொடர்ந்து பங்கேற்கிறாரா?
சீன கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக இடையேயான உறவை வளர்க்க சீனாவுக்கு அரசு பிரதிநிதிகளை அனுப்புகிறதா? இதன் மூலம் நமது நாட்டிற்கு கிடைத்தது என்ன? இம்மாதிரியான உறவு வளர்க்கப்பட்ட போதிலும் எல்லை ஏன் பாதுகாப்பற்று இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் வரை ரயில் சேவை ரத்து!