வங்கதேச பிரதமர்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார்.
சோனியாவுடன் சந்திப்பு: இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டதாகக் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நீண்டகாலப் பிரதமர்: வங்கதேசத்தின் நீண்டகாலப் பிரதமராகப் பதவி வகித்து வருபவர் என்ற பெருமைக்கு ஷேக் ஹசீனா சொந்தக்காரர். நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று இந்தியா வந்து சென்றார். அதேபோல், கடந்த 2011ஆம் ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்கலாமே:
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா - மோடி சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து