இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சார்பில் இன்று (டிச.23) மாலை 3 மணிக்கு போராட்ட பேரணி நடந்தது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத், மூத்தத் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்ட பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் பேசிய ராகுல் காந்தி, மாணவர்களின் குரலை துப்பாக்கிக் குண்டுகள், காவலரின் லத்தி அடி, அச்சுறுத்தல் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடக்க முயற்சிக்கிறார் எனக் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக அவர் தனது ட்விட்டரில் மாணவர்கள், இளைஞர்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். அதில், "அன்புள்ள மாணவர்களே, நீங்கள் இந்தியர் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது, அதனை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது.
நாட்டில் மோடி-ஷா (பிரதமர்-உள் துறை அமைச்சர்) கூட்டணியில் வெறுப்பு கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இதற்கு எதிராகப் போராட எங்களோடு (காங்கிரஸ்) அணி சேருங்கள்" என அறைகூவல் விடுத்திருந்தார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் - வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல் காரணமாக அந்நாட்டை விட்டு அகதிகளாக 2014 டிசம்பர் 31க்கு முன்னர் வெளியேறிய முஸ்லிம்கள் அல்லாதோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.
இந்தச் சட்டம் மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது. முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்குவதுபோல் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு நரேந்திர மோடி கடவுளாக தெரிகிறார்: சிவ்ராஜ்சிங் சவுகான்