நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதால், பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பாக 11 மசோதாக்கள் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த 11 மசோதாக்களில் நான்கு மசோதாக்களை ஏற்க முடியாது எனவும், அவற்றை எதிர்ப்போம் எனவும் காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''விவசாயம் தொடர்பாக மோடி அரசு ஜூன் மாதம் அறிமுகம் செய்த மூன்று மசோதாக்களை ஏற்க முடியாது. விவசாயிகளின் வர்த்தக உற்பத்தி, வர்த்தக மசோதா, விலை உத்தரவாதம் குறித்த விவசாயிகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகியவற்றை ஏற்க முடியாது.
இந்த மசோதாக்கள் நிறைவேறினால் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மாநிலங்களின் வருவாய் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அதே நேரத்தில் பெருநிறுவனங்கள் நல்ல பலன்களை அனுபவிக்கும். மேலும் பொதுக் கொள்முதல் முறை அகற்றப்படும். உணவு பாதுகாப்புத் தூண்களின் மீதான பாஜக அரசின் தாக்குதலை எங்களால் அனுமதிக்க முடியாது.
இந்த மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது போன்ற சமயங்களில் மாநில அரசுடன் மத்திய அரசு ஒருபோதும் ஆலோசனை மேற்கொள்வதில்லை.
இதனைத் தொடர்ந்து வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவையும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளை பாதிக்கிறது. இது மாநிலங்களுக்கும், அரசியலமைப்பிற்கும் எதிரானது.
வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா குறித்து காங்கிரஸ் கட்சி ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளை மாநில அரசு தான் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, மத்திய அரசு இல்லை. இந்த மசோதா சட்டமாகிவிட்டால், அனைத்து முக்கிய நிதி இடைத்தரகுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வரும். கூட்டுறவு உறுப்பினர்களின் கட்டமைப்பை மாற்ற மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியின் நிதிக் கட்டமைப்பை மாற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து கரோனா சூழல், பொருளாதாரப் பிரச்னைகள், சீன எல்லை விவகாரம், சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீட்டு அறிக்கை, பிஎம் கேர்ஸ் நிதி என ஏராளமான பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளோம்.
ஒருமித்த கருத்து உள்ள கட்சிகளோடு இது குறித்து பேசி வருகிறோம். அதன்மூலம் இந்த மசோதாக்களை எதிர்த்து ஒன்றாகக் கேள்வி எழுப்புவோம். நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சோனியா, ராகுல் பங்கேற்பது சந்தேகம்!