இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் அரசியல் விளக்கக் கூட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்றது.
இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகள் 23 நாள்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை பிளவுபடுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு தங்களது மூர்க்கத்தனமான பிடிவாதத்தைக் கைவிட்டு, விவசாயிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும்.
டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆளுநர் கிரண்பேடி இப்போது முழு அதிகாரத்துடன் புதுச்சேரியில் ஆட்சி நடத்திவருகிறார். ஆளுநருக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் பலத்தையும் வாக்குகளையும் பிரிக்க புதிய கட்சிகள் தொடங்கப்படுகின்றன. வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: மய்யமாக சென்றால் லாரியில் தான் மோத வேண்டியிருக்கும் - முத்தரசன் விமர்சனம்