வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆம்பன் புயல் நேற்று (மே 20) மாலை மேற்கு வங்கம் - வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கனமழை பெய்ததால் மேற்கு வங்கம் மாநிலம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை மேற்குவங்க மாநிலத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆம்பன் புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது வாழ்நாளில் இதுபோன்ற பேரிடரை தான் பார்த்தது இல்லை என்று கூறினார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கும், தற்போது நிலவும் சூழலை கண்காணிக்கவும் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 மணி நேரத்தில் 1.5 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு!