ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பு மருந்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிரேசில் போன்ற மற்ற நாடுகளிலும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் இரண்டாம்கட்ட மருத்துவ சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
அதன்படி, இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் இரண்டாம்கட்ட மருத்துவ சோதனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. புனேவில் 17 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரண்டாம்கட்ட சோதனைகள் நடைபெற்றுவரும் நோபல் மருத்துவமனையின் ஆராய்ச்சித் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.கே ரவுத் கூறுகையில், "கடந்த சில நாள்களில் 17 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தும் பணி வியாழக்கிழமை (டிச. 3) தொடங்கியது.
தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட அனைவரது உடல்நிலையையும் அடுத்த சில நாள்களுக்கு தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம்" என்றார்.
இந்தியாவில் ஸ்புட்னிக் வி இரண்டாம்கட்ட மருத்துவ சோதனையில் 100 பேருக்கும், மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில் 1500 பேருக்கும் என மொத்தம் 1,600 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிகோரும் இந்திய நிறுவனம்