கோவாவில் மாநில அரசு தேர்வு வாரியத்தின் சார்பாக, பத்தாம் வகுப்புக்கான தேர்வு நடைபெற்றது. அதில், ஆங்கில மொழித்தாள் தேர்வில் இடம் பெற்றுள்ள ஒரு கேள்வியை இரு நபர்கள் உரையாடும் வகையில் உருவாக்கியிருந்தனர்.
அதில் ஒருவர், "இங்கு வேலை கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே, போர்த்துக்கீசிய நாட்டிற்குச் சென்று வேலை பார்க்க பாஸ்போர்ட் வாங்க வந்தேன்" என்பார். இதற்கு பதிலளிக்கும் மற்றொரு நபர், "மிகவும் சரியான முடிவு இது. கோவாவில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும்" என்பார்.
இந்தக் கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியதையடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோவா கல்வி வாரியத் தலைவர் ராம்கிருஷ்ணா சமந்த் கூறுகையில், "இந்த கேள்வியைத் தயாரித்தவர் யார் என்பதைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்போம். வினாத்தாள் அமைப்பாளர்கள் எப்படி இந்தக் கேள்வியை கவனிக்க மறந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இதுதொடர்பாக பேசிய கோவாவின் முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத், "மாநில அரசில் நடக்கும் உண்மையைத்தான் வினாத்தாளில் குறிப்பிட்டுள்ளனர்" என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ரயில்வே உயர் அலுவலருக்கு கரோனா: மூடப்பட்ட தலைமையகம்!