உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். தலைமை நீதிபதி மீதே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாலியல் புகாரில் ரஞ்சன் கோகாயை சிக்க வைப்பதற்கு சதி நடக்கிறது என வழக்கறிஞர் பெய்ன்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சதி நடைபெற்றதாக எழுப்பப்பட்ட புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. மேலும், விசாரணை தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த குழுவுக்கு சிபிஐ இயக்குநர், மத்திய உள்துறை அமைச்சக இயக்குநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், நீதித்துறையை கட்டுப்படுத்த நினைக்கும் சக்திகளை இந்த குழு கண்டுபிடிக்கும் எனவும் கூறியுள்ளது.