காஷ்மீரின் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற சீனாவை, இந்திய ராணுவத்தின் எல்லை ரோந்து படை முறியடித்தது. ராணுவத்தின் வீரத்தை பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " சீனாவின் சதித் திட்டத்தை இந்திய ராணுவத்தினர் துணிச்சலாக தடுத்துள்ளனர். ஆனால், சீன அரசாங்கத்தின் மனநிலையும், அதன் ராணுவத்தின் மனநிலையும் மிகவும் ஆபத்தானது. இந்திய பகுதிகளை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது. ஆனால் இது 2020, 1962 அல்ல என்பதை சீனா நினைவுகொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " 1962ஆம் ஆண்டு போல் இல்லாமல் தற்போது இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் ராணுவம், ராஜதந்திரம், அனைத்து துறைகளிலும் கணிசமான முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது. எனவே, இக்கட்டான சூழ்நிலையையும் இந்தியாவால் எளிதாக கையாள முடியும். அதை சீன அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு இந்தியா இன்னும் தீர்க்கமாக இருக்க வேண்டும். அண்டை நாடுகளான நேபாளம் போன்றவற்றுடன் நட்பு உறவை மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.