இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்நிலையில்,தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கோவிட்-19 வைரஸ் தொற்றால் இதுவரை 70 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவற்றுள் 11 பேர் பூரண குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
முதல் கரோனா தொற்று மார்ச் 2 ஆம் தேதி அறியப்பட்டது. அந்த நபர் மார்ச் 13 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று அவரிடம் பிரதமர் மோடி பேசினார். அந்த நபர் அவரிடம் சிறப்பான முறையில் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தற்போது,11 பேர் காரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், 58 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 76 வயதானவரை தவிர மற்ற அனைவருக்கும் பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை எனக் தெரிவித்தார்.
மேலும், இதுவரை, 26 ஆயிரத்து 937 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தும் காலத்தை நிறைவு செய்து வருகிறார்கள். ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலங்கானா கரோனா இல்லாத மாநிலமாக ஆக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க:'ஏப்ரல் 7-க்குள் கரோனா இல்லாத தெலங்கானா' - கேசிஆர் உறுதி