முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் 99ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல அரசியல் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், '' இந்திய அரசியல், பொருளாதாரம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ். புதிதாக கட்டவுள்ள பல்கலைக்கழகத்திற்கோ அல்லது தற்போது செயல்பட்டுவரும் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். நான் அதிகாரத்தில் இருந்தால் நிச்சயம் செய்வேன்.
பல பழமைவாதக் கருத்துக்களிலிருந்து இந்தியாவை வெளிக்கொண்டு வந்ததோடு, வளமான மற்றும் தன்னம்பிக்கைக் கொண்ட தேசமாக இந்தியாவை மாற்றியவர் நரசிம்ம ராவ்.
இந்தியாவிற்கு அவர் செய்த வரலாற்று பங்களிப்பை அவரது நண்பர்கள், விமர்சகர்கள், எதிர்க்கட்சியினர் என யாரும் சந்தேகிக்க முடியாது. அவரது நூற்றாண்டு விழாவை மத்திய அரசு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவை பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மறைக்கப்பட்ட நவீன இந்தியாவின் சாணக்கியர் பி.வி. நரசிம்ம ராவ்